ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டில் நடுத்தர மற்றும் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யலாம் என தரகு நிறுவனமான ஜியோஜித் பரிந்துரைத்துள்ளது.
53.3 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஜியோவின் சந்தை முன்னிலை, அதிகரிக்கும் வாடிக்கையாளர் வருவாய், வலுவான பணப்புழக்கம் ஆகியவை இந்தப் பரிந்துரைக்கு முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. நாடு தழுவிய தொலைத்தொடர்பு கட்டமைப்பும் நிறுவனத்துக்குச் சாதகமாக உள்ளது.
2025–26 நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,46,885 கோடியாகவும், சரிசெய்யப்பட்ட நிகர லாபம் ரூ.30,046 கோடியாகவும் உயர்ந்துள்ளது. பங்கு வெளியீட்டு நிதியைக் கொண்டு கடனைக் குறைப்பது, நிதிநிலையை மேலும் வலுப்படுத்தும் என அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
உயர் மதிப்பீட்டால் குறுகியகால லாப வாய்ப்பு மிதமாக இருக்கலாம். இருப்பினும், கிளவுட், செயற்கை நுண்ணறிவு, நிறுவனச் சேவைகள், பிராட்பேண்ட் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு, இந்த வெளியீட்டுக்கு ‘சப்ஸ்கிரைப்’ பரிந்துரையை ஜியோஜித் வழங்கியுள்ளது.